தூத்துக்குடி மாவட்டம், ஏரல் சந்திரா தியேட்டர் உரிமையாளர் ஜான்பாலுக்கு சொந்தமான தோட்டம் சாயர்புரம் அருகே உள்ள நட்டாத்தில் அமைந்துள்ளது.
இந்தத் தோட்டத்தில் தென்னை, பனை மரங்கள், ஆடு மாடுகள் உள்ளிட்டவைகள் வளர்க்கப்பட்டு வருகிறன. ஆடு மாடுகளை பராமரிப்பதற்காகவும், தோட்டத்தை பாதுகாப்பதற்காக இரண்டு காவலாளிகள் அங்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதில், காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை ஒருவரும், மாலை 6 மணியிலிருந்து மறுநாள் காலை 6 மணி வரை மற்றொருவரும் என இரண்டு காவலாளிகள் மாறி மாறி பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஏரல் அருகே உள்ள கோட்டைக்காடு நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த காவலாளி சந்திரசேகர் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த தோட்டத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்தநிலையில் வழக்கம்போல் இன்று காலை வேலைக்கு சென்றுள்ளார்.
பின்னர், சுமார் மாலை 5.30 மணியளவில் அந்த தோட்டத்தில் பணிபுரியும் ஜெயா என்பவர் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு தலைப்பகுதியில் வெட்டு காயங்களுடன் காவலாளி சந்திரசேகர் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஜெயா சாயர்புரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்த சந்திரசேகர் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தோட்ட காவலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.