தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள மாங்கொட்டாபுரத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து மகன் சண்முகராஜா ( 54 ). இவர், ஏரல் தாலுகா அலுவலக வளாகத்தில் நின்று கொண்டு அங்கு வருபவர்களிடம் மனு எழுதுவதற்கு பணம் வாங்கிக் கொண்டு மனு எழுதிக் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், விதவை உதவி தொகை பெற மனு அளிப்பதற்காக சிறுத்தொண்டநல்லூரை சேர்ந்த மகாராஜா மனைவி முத்துமாரி என்பவர் சண்முகராஜாவிடம் சென்றுள்ளார். அவர் மனு எழுதிக் கொடுத்ததுடன், உனக்கு இந்த சான்றிதழ் பெற்று தருகிறேன் அதற்காக ரூ.5200 பணம் வேண்டும் எனக்கூறி அவரிடம் இருந்து 5200 ரூபாயை கடந்த பத்து தினங்களுக்கு முன்பு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், முத்துமாரி இன்று ஏரல் தாலுகா அலுவலகம் சென்று அங்கு தாசில்தாரை சந்தித்து விபரத்தை கூறியுள்ளார். அவர் முத்துமாரியை கண்டித்ததுடன் சண்முகாராஜாவை பிடித்து விசாரணை செய்துள்ளார். விசாரணையில் அவர் முத்துமாரியிடம் சான்றிதழ் வாங்கி தருவதாக கூறி 5200 பணம் பெற்றது தெரியவந்தது. இதனையடுத்து, சண்முகராஜாவை தாசில்தார் ஏரல் போலீசாரிடம் ஒப்படைத்தார். மேலும், இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து ஏரல் தாசில்தார் கோபால் கூறுகையில்:-
பொதுமக்கள் யாரும் வளாகத்தின் வெளியே நின்று கொண்டிருக்கும் தனிநபர்களிடம் மனு அளிக்க வேண்டாம் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு எழுதி கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.