மதுரை தமிழன் தெரு பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் என 25 பேர் ஒரு வேனில் தூத்துக்குடி மாவட்டம், குறுக்கு சாலை அருகே உள்ள கொல்லம் பரம்பில் இருக்கும் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளனர்.
வேனை அதே பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (47) என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில் வேன் மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் எட்டயபுரம் காவல் நிலையம் அருகே வந்தபோது, திடீரென நிலைத் தடுமாறி அங்கிருந்த பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த ஈஸ்வரன், ராமலட்சுமி (40), நவீன் பாண்டி (19), யுவராஜ் (10), சுபஸ்ரீ (15), ஷாலினி (20), பரமேஸ்வரன் (9), வித்யா சங்கர், வித்யா (29), சண்முகக்கனி (80), புஷ்பம் (60) , முருகேஸ்வரி (50), ரூபன் சக்கரவர்த்தி (8),, பெருமாள் (53) உள்ளிட்ட 14 பேர் காயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.