சாத்தான்குளம் அருகே பொதுமக்கள் குறைகளை உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் வாட்ஸ் அப் குழு அமைத்து, அதன் மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்டு அதற்கான நடவடிக்கையை உடனடியாக பஞ்சாயத்து தலைவர் மேற்கொள்வதால், அவரின் இச்செயலை அக்கிராம மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகாவில் 24 கிராமம் உள்ளடக்கிய மிகப்பெரிய பஞ்சாயத்து ஆக அரசூர் ஊராட்சி மன்றம் விளங்குகிறது. இதன் அலுவலகம் இடைச்சிவிளையில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி மன்றத்தின் தலைவராக தினேஷ் ராஜசிங் பதவி வகித்து வருகிறார்.
இந்த பஞ்சாயத்திற்கு உட்பட்ட பொதுமக்களின் குடிநீர் மற்றும் மின்விளக்கு போன்ற குறைகளை கூற பஞ்சாயத்து அலுவலகம் வந்து அங்குள்ள புகார் பதிவேட்டில் பதிவு செய்வது வழக்கம். ஆனால் அலுவலகம் வருவதற்கு சுற்று வட்டார கிராம மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்தநிலையில், கடந்த 8 மாதங்களாக பஞ்சாயத்து சார்பாக மக்கள் நல சங்கம் என்று வாட்ஸ் அப் குரூப் ஆரம்பித்து, அதில் 24 கிராமத்தில் உள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட நபர்களை ஒன்றிணைத்து, எந்தப் பகுதியில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் இந்த தளத்தில் பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் பதிவு செய்தால் அப்புகார் குறித்து பஞ்சாயத்து தலைவர் தினேஷ் ராஜசிங் தலைமையிலான பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு வருகிறது.
மேலும், தீர்வு காண முடியாத பிரச்சனைகளாக இருந்தாலும், களத்திற்கு நேரடியாக சென்று பார்வையிடும் பஞ்சாயத்து தலைவர் தினேஷ் ராஜசிங், தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்து அதற்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்:-
எங்களுடைய பிரச்சனைகளை ஒவ்வொரு முறையும் பஞ்சாயத்து அலுவலகத்தைச் சென்று மிகுந்த சிரமப்பட்டு சொல்லி வந்த நிலையில், தற்போது இந்த குறை தீர்க்கும் வாட்ஸ் அப் குழு தளமான மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இதனால், நாங்கள் இருக்கும் இடத்தில் எங்களுடைய குறைகளை இதில் பதிவிட்டு செய்தால் உடனடியாக மக்கள் குறைகளை உடனுக்குடன் திர்வு காணப்படுகிறது. இவை எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது என்று கூறினார்கள். இதே போலவே அனைத்து பஞ்சாயத்து சார்பாகவும் மக்கள் குறைகளை கேட்டு அறிந்து, உடனடியாக தீர்வு காண்பதற்கு வசதியாக வாட்ஸ்அப் குழு தளத்தை உருவாக்கிட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.