குளத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட கள் விற்பனை செய்த ஐந்து பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 17 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜா, பயிற்சி உதவி ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு, குளத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிழக்கு கடற்கரை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வைப்பார் ஜங்ஷன் கலைஞானபுரம் விலக்கு பகுதியில் சிலர் பிளாஸ்டிக் பாட்டில்களுடன் நின்று கொண்டிருந்தனர். போலீசார் அந்த பகுதிக்குச் சென்று பார்த்தபோது, அங்கிருந்த ஐந்து பேரும் தடை செய்யப்பட்ட பனங்கள்ளை விற்பனைக்காக வைத்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து விற்பனைக்காக கள் வைத்திருந்த பெரியசாமிபுரத்தை சேர்ந்த சேவியர் பிரகாசம் ( 30 ), அந்தோணிசாமி ( 52 ), வேப்பலோடை மீனவர் காலனி இருதய ஞான ஜேம்ஸ் ( 30 ), ஏ.எம்.பட்டி அரிராமன் ( 38 ), ஆரோக்கியபுரம் மாரி ராஜா ( 58 ), ஆகிய ஐந்து பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 17 லிட்டர் கள்ளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மது விற்பனை
குளத்தூர் அண்ணா நகர் ஆலமரம் பகுதியில் சட்டவிராதமாக மது விற்பனை செய்த வேதக்கோயில் தெருவை சேர்ந்த அழகு தங்கம் ( 26 ), என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 48 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்