போலீசுக்கு தகவல் சொன்னதால் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள சோளத்தட்டைக்கு தீ வைத்ததாக ஒருவர் மீது புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை அருகே முடிவைத்தானேந்தலை சேர்ந்தவர் புலக்கண்ணு ( 58 ) மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள அவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். மாட்டு தீவனத்திற்காக சோளத்தட்டை வாங்கி வீட்டருகே சேமித்து வைத்திருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் மது போதையில் தெருவில் சத்தம் போட்டு உள்ளாராம். இது குறித்து போலீசாருக்கு புலக்கண்ணு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், புலக்கண்ணு வீட்டு பின்புறம் இருந்த சோளத்தட்டைக்கு மர்மநபர் தீ வைத்ததில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள சோளத்தட்டை எரிந்து சேதமானது. இது குறித்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புலக்கண்ணு புகார் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, போலீசார் விசாரித்ததில் லட்சுமணன் தீவைத்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல் ஆய்வாளர் வன சுந்தர், லட்சுமணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.