மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அரசு சார்பில் வீடு கட்ட அனுமதி வழங்கி முதல் தவணை பணம் வழங்காததை கண்டித்து ஸ்ரீவைகுண்டத்தில் திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கன மழையால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் இருந்த கிராமங்களில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.
இதையடுத்து சேதமடைந்த வீடுகளுக்கு முதல்கட்டமாக ரூபாய் பத்தாயிரம் வழங்கப்பட்டது. அதன்பின்னர் பாதிக்கப்பட்ட வீடுகளின் தன்மையை பொறுத்து வீடு கட்ட அரசு அரசாணை வழங்கியது. அதன்படி முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு 4 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தது.
இந்த நிலையில், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 30 ஊராட்சிகளில் மொத்தமாக 1320 வீடுகளுக்கு வீடு கட்டுவதற்கு அரசாணை வழங்கப்பட்டது. இந்த அரசாணையை பெற்றுக்கொண்ட பயனாளிகள் வீட்டை கட்டும் பணியை தொடங்கினர். அதன்படி முதல் தவணை பணம் பெறும் வகையில் வீட்டை கட்டியுள்ளனர். ஆனால் ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் முதல் தவணை வரவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பயனாளிகள் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் சேர்ந்து ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிக்கும் பொதுமக்களும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, அங்கு வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 10 தினங்களுக்குள் தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் வீடுகள் திட்டத்திற்கு பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து பெண்கள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.