ஆனந்தவிளை - பூச்சிக்காடு இடையே தோட்டத்தில் மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் பனை, முருங்கை மரங்கள் எரிந்து நாசமாகின.
சாத்தான்குளம் அருகே அரசூர் ஊராட்சிக்குள்பட்ட ஆனந்தவிளையில் இருந்து பூச்சிக்காடு செல்லும் பகுதியில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன . இதனை அப்பகுதி விவசாயிகள் உயர்த்தி கட்டகோரி மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் சீரமைக்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில், மின்கம்பிகள் உரசியதில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு அங்குள்ள தோட்டத்தில் உள்ள வேலி பகுதியில் தீ பற்றி எரிந்தது. காற்று பலமாக வீசியதில் தீ பரவி அருகில் உள்ள தோட்டங்களிலும் பரவியது. உடனே அருகில் உள்ளவர்கள் திசையன்விளை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு மீட்பு குழுவினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இதில் பனைவிளை முருகேசன் என்பவரது தோட்டம் உள்ளிட்ட அப்பகுதியில் உள்ள 4 தோட்டங்களில் தீ பிடித்து எரிந்ததில் 60க்கு மேற்பட்ட முருங்கை மரங்கள் பனை மரங்கள் கருகின.