தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள அங்கமங்கலம் ஶ்ரீ நரசிங்கநாத ஈஸ்வரர் சுவாமி சமேத ஶ்ரீ ஆவுடைநாயகி அம்பாள் திருக்கோவிலின் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் இன்று ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு, கடந்த 5 ஆம் தேதி அதிகாலை சிறப்பு ஹோமம், தன பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. குரும்பூர் ஆதிநாராயண பெருமாள் திருக்கோவிலில் இருந்து புதிதாக செய்யப்பட்ட நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் சிலைகளின் பவனியும், கங்கை, தாமிரபரணி, திருச்செந்தூர் கடல் தீர்த்தம் ஆகியவற்றை கொண்டு தீர்த்த சங்கிரஹணம் நடைபெற்றது.
நேற்று சனிக்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, ஹோமம் தீபாராதனை, யந்திரஸ்தாபனம் மற்றும் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடைபெற்றது. தொடர்ந்து மூன்றாம் கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடைபெற்றது.
இன்று அதிகாலை நான்காம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி, ஷோடசோபாசார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாத்ராதானம், கடம் எழுந்தருளல் நடைபெற்று காலை 6:30 மணிக்கு ஶ்ரீ நரசிங்கநாத ஈஸ்வரர் சுவாமி சமேத ஶ்ரீ ஆவுடைநாயகி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்மாபிஷேகம் நடைபெற்றது. மாலை மஹா அபிஷேகமும், சுவாமி, அம்பாள் திருக்கல்யாணமும், இரவு 10:00 மணிக்கு விநாயகர், சுவாமி − அம்பாள் திருவீதி எழுந்தருளல் நடைபெறுகிறது.
இந்நிகழ்வில் பெருங்குளம் திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் 103வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சார்ய சுவாமிகள், தேவஸ்தான செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, அங்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பானுப்பிரியா பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.