வல்லநாடு நான்கு வழிச்சாலையில் உள்ள தாமிரபரணி ஆற்றுப் பாலத்தின் உறுதித்தன்மை அளவீடு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வரை 47 கி.மீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலை பணிகள் நிறைவடைந்து 20.11.2012 அன்று போக்குவரத்து துவங்கியது. இந்த சாலையை பொறுத்தவரை, தினந்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் துறைமுகத்திற்கும், துறைமுகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும்.
அதே போல் தூத்துக்குடி விமான நிலையங்களுக்கு செல்லும் வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் இந்த வழியாக செல்லும். மேலும் தூத்துக்குடியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளது. அங்கு செல்லும் வாகனங்களும் இந்த வழியாகத்தான் சென்று வரும்.இந்த நான்கு வழிச்சாலை பணிகளில் வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்றில் பிரம்மாண்டமான பாலம் அமைக்கப்பட்டது.
இந்த பாலம் அமைக்கப்பட்டதில் இருந்தே பலமுறை பாலத்தில் சேதம் ஏற்பட்டு வந்தது. இந்த பாலத்தில் போக்குவரத்து தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை 12 முறை பாலத்தில் பல்வேறு இடங்களில் ஓட்டை ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. இதையடுத்து கடந்த 21.09.2022 ஆம் தேதி பாலத்தை சீரமைக்க சுமார் 13.22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி நடந்து வந்தது.
இதற்கிடையில், கடந்த 1 மாதத்திற்கு முன்பு பாலத்தின் ஒரு பகுதியில் மீண்டும் சேதம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது இந்த தாமிரபரணி ஆற்றுப்பாலத்தின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக ஒரு குழுவினர் வருகை தந்தனர். அவர்கள் வயரை பாலத்தில் பொறுத்தி கம்யூட்டர் மூலம் இணைத்து பாலத்தின் மேலே 4 கனரக வாகனங்களை நிறுத்தி பாலத்தின் அழுத்தம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் நிறுத்தப்படும் வாகனம் ஒருநாள் முழுவதும் பாலத்தின் மேல் நிறுத்தி எவ்வளவு அழுத்தம் தாங்குகிறது என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அந்த குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.