ஆழ்வார்திருநகரி அருகே சொத்து பிரச்சனையில் விவசாயியை வெட்டிக் கொன்ற உறவினர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அருகே உள்ள செம்பூர் கிராமம், தவசி நகரைச் சேர்ந்தவ விவசாயி பெரியபெருமாள் மகன் காசி (52). அதே பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் செல்வமணி (38). உறவினர்களான இருவருக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம் 30ந் தேதி வீட்டின் முன் கட்டிலில் படுத்திருந்த காசியை செல்வமணி அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ஆழ்வார் திருநகரி போலீசார் வழக்குப் பதிந்து செல்வமணியை கைது செய்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காசி நேற்று இரவு உயிரிழந்ததையடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.