தூத்துக்குடியில் கொன்று புதைக்கப்பட்ட வாலிபரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தூத்துக்குடி மேட்டுப்பட்டி சங்குகுளி காலனி பகுதியை சேர்ந்தவர் களஞ்சியம். இவரது மனைவி கணேஷ்வரி. இவர்களுக்கு 5 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதில் கடைசி மகனான மாரிசெல்வம் என்ற அசால்ட்(24) என்பவர் கடந்த 21-ஆம் தேதி காணாமல். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் தாளமுத்துநகர் போலீசில் புகார் செய்தார்.
மேலும் தனது மகனுக்கு 3 சிறுவர்களால் ஆபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று அவரது தாய் கணேஷ்வரி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் கடந்த வாரம் புகார் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் தாளமுத்துநகர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதில், சந்தேகத்தின் பேரில் மேட்டுப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, கடந்த 20 ஆம் தேதி மாரிசெல்வத்திற்கும், மேட்டுப்பட்டியை சேர்ந்த 4 சிறுவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவர் மாரிசெல்வத்தின் செல்போனை உடைத்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மாரிசெல்வம் அதில் ஒருவரது செல்போனை பறித்து அதனை கடலில் வீசி உள்ளார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளதாம்.
பின்னர், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதனையடுத்து, அன்று இரவு மாரிசெல்வத்தின் வீட்டிற்கு சென்ற சிலர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். பின், மாரிசெல்வம் கடந்த 21-ஆம் தேதி திரேஸ்புரம் பகுதியில் வந்தபோது 3 சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேர் கும்பல் அவரை சுற்றி வளைத்தது அடித்துள்ளது. அவர்களிடம் இருந்து மாரிச்செல்வம் தப்பி ஓடி உளளார். இருப்பினும் அந்த கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி செங்கற்களால் தாக்கி உள்ளனர். இதில் மயக்கம் அடைந்த அவரை அந்த கும்பல் கை, கால்களை கட்டி அங்கேயே குழி தோண்டி உயிருடன் புதைத்துள்ளனர்.
இந்நிலையில், புதைக்கப்பட்ட மாரிசெல்வத்தின் உடல் தாசில்தார் பிரபாகரன் முன்னிலையில் இன்று தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திலேயே பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.