தூத்துக்குடி கிழக்கு கடற்கரைச் சாலை மீன்பிடி துறைமுகம் அருகே சந்தேகத்திக்கிடமான வகையில் ஒரு லாரி பல மணி நேரமாக நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அந்த லாரியில் கடத்தி வரப்பட்ட கலப்பட டீசல் இருந்தது தெரியவந்தது. இது குறித்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆய்வாளர் துரை தலைமையிலான போலீசார், கலப்பட டீசல் கடத்தியதாக, ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் பிரதீப்ராஜ் (30), பெரியராசு மகன் கிட்டப்பன் (37) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் லாரி மற்றும் அதில் 60 பேரல்களில் இருந்த சுமார் 9 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், இந்த கலப்பட டீசலை மதுரையில் இருந்து கடத்தி வந்து மீன்பிடி படகுகளுக்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதுதொடர்பாக மாவட்ட குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.