சங்கரலிங்கபுரம் கிராமத்தில் தனிநபர் நில ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் கிராமத்தில், சர்வே எண் 347/04-ல் அமைந்துள்ள சுமார் 27 சென்ட் நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறியும், அதனை அகற்றி பொது பயன்பாட்டிற்கு தர வேண்டும் என வலியுறுத்தி சங்கரலிங்கபுரம் கிராம மக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக நேற்று ( 5.7.24 ) விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சங்கரலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலாளர் முரசு தமிழப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தனிநபர் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், போலியாக பத்திர பதிவு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர், இது தொடர்பான கோரிக்கை மனுவினை விளாத்திகுளம் வட்டாட்சியர் இராமகிருஷ்ணனிடம் அளித்தனர். இந்த ஆர்பாட்டத்தைத் தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.