• vilasalnews@gmail.com

கோவில்பட்டி செய்தியாளருக்கு கொலை மிரட்டல் : சென்னை பிரஸ் கிளப் கடும் கண்டனம்!

  • Share on

கோவில்பட்டியில் தனியார் தொலைக்காட்சி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்திற்கு சென்னை பிரஸ் கிளப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை பிரஸ் கிளப் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது ;- 

கோவில்பட்டி இளையசரனேந்தல் பகுதியில் அமைந்துள்ள சுரங்கப் பாதையையொட்டி சர்வீஸ் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக, ஆக்கிரமிப்பு அதிகரித்து விட்டதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில்,

கோவில்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ.ஜேன் கிறிஸ்டி தலைமையில் நகராட்சி அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், நபார்டு வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் அடிப்படையில், நகராட்சி கட்டுமானப் பிரிவு பொறியாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் ஆக்கிரமிப்பு அளவீடு பணிகள் ஜூலை 3 அன்று மதியம் 2.30 மணியளவில் நடைபெற்றுள்ளது. 

அப்போது நகராட்சி அதிகாரிகளின் ஆக்கிரமிப்பு அளவீடு பணியை செய்தி சேகரித்துக் கொண்டிருந்த நியூஸ் 18 தொலைக்காட்சி கோட்ட செய்தியாளர் மகேஷ்வரனை, அதே பகுதியில் A1 டீ ஸ்டால் என்ற கடை நடத்திவரும் உரிமையாளர் கணேசன் மற்றும் அவரது சகோதரர் சரவணன் ஆகியோர் மிரட்டியிருக்கின்றனர்.

ஆக்கிரமிப்பு தொடர்பாக உனது தொலைக்காட்சியில் செய்தி எதுவும் வெளியிட்டால், உனது கையை வெட்டி, தலையை முண்டமாக்கி ரோட்டில் போட்டுவிடுவோம் என்று பலர் பார்க்க பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றனர். அவர்கள் இருவரும் மிரட்டுவது அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியிருக்கிறது. 

மேலும், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தலையிட்டு செய்தியாளர் மகேஸ்வரனிடம் பிரச்சினை செய்த கணேசன் மற்றும் சரவணனை அனுப்பியும் வைத்திருக்கின்றனர்.

இது ஒரு புறமிருக்க, யார் ரோட்டை ஆக்கிரமிப்பு செய்தால் பத்திரிகைகளுக்கு என்ன? இவர்களை எல்லாம் ரோட்டில் நடமாடவிட்டதே தப்பு. என்று தனது பங்குக்கும் செய்தியாளர் மகேஸ்வரனுக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார் நகராட்சி கட்டுமானப் பிரிவு பொறியாளர் கிருஷ்ணகுமார்.

இவையனைத்தையும் தகுந்த ஆதாரங்களோடு, கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் செய்தியாளர் மகேஸ்வரன் புகார் அளித்த நிலையிலும், கொலை மிரட்டல் விடுத்த பொறியாளர் கிருஷ்ணகுமார், A1 டீக்கடை உரிமையாளர் கணேசன் மற்றும் அவரது சகோதரர் சரவணன் மீது வழக்கு பதிவு செய்ய மறுத்து வருகிறது காவல்துறை.

பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்துள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பாக நகராட்சி அதிகாரிகள் செய்த அளவீடு பணியை செய்தி சேகரிக்க சென்றதில் என்ன குற்றம்.? ஆக்கிரமிப்பை அகற்றினால் வருவாய் இழக்க நேரிடும் என டீக்கடை உரிமையாளர் கணேசன் மிரட்டியதும் அல்லாமல் நகராட்சி பொறியாளரும் சேர்ந்து கொண்டு ஏன் செய்தியாளரை மிரட்ட வேண்டும்? தகுந்த ஆதாரங்களோடு புகார் தெரிவித்தும் போலீசாரும் ஏன் வழக்குப் பதிவு செய்யாமல் தட்டிக் கழிக்க வேண்டும்?


இந்தப் போக்கை சென்னை பிரஸ் கிளப் வன்மையாக கண்டிக்கிறது. நியூஸ்18 செய்தியாளர் மகேஸ்வரனின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள சூழலில், கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை பிரஸ் கிளப் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Share on

தூத்துக்குடி அருகே அனுமதியின்றி செம்மண் திருடிய 2 பேர் கைது - 2 டிப்பர் லாரிகள் பறிமுதல்!

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்!

  • Share on