ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனையில் நள்ளிரவில் லாரி மோதி டிரான்ஸ்பார்மர் அடியோடு சாய்ந்தது அப்பகுதியில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை யில் இருந்து எப்போதும்வென்றான் சாலையில் பெட்ரோல் பங்க் அருகில் டிரான்ஸ்பார்மர் ஒன்று சாலையோரமாக அமைந்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து கயத்தாரை நோக்கி டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை கொலுவைநல்லூர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (46 )என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது லாரி பசுவந்தனை பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்த போது தூக்க கலக்கத்தில் லாரி டிரைவர் ஓட்டியதாக கூறப்படுகிறது. இதில் எதிர்பாராத விதமாக டிரான்ஸ்பார்மர் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் டிரான்ஸ்பார்மர் அடியோடு சாய்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் எந்த காயங்களும் இன்றி உயிர் தப்பினார் .
இந்த விபத்தினால் அந்தப் பகுதியில் மின் விநியோகம் இரவு முழுவதும் துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் மின்சாரம் இல்லாமல் மிகுந்த சிரமம் அடைந்தனர். இதனையடுத்து பசுவந்தனை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் பார்வையிட்டு, லாரி டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.