கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த 2.7.2020 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சிவகளை பகுதியைச் சேர்ந்தவர்களான கசமுத்து மகன் அருண்மகேஷ் (26) மற்றும் லட்சுமணன் மனைவி முத்துபேச்சி (42) ஆகிய இருவரையும் குடும்ப பிரச்சனை காரணமாக கொலை செய்த வழக்கில் கொலையுண்ட முத்துபேச்சியின் உறவினரான ஏரல் முதலியார் தெருவை சேர்ந்த அருணாச்சலம் மகன் முத்துராமலிங்கம் (27) மற்றும் அவரது நண்பர்களான சிவகளை பொட்டல் பகுதியைச் சேர்ந்தவர்களான சுந்தரம் மகன் முத்துசுந்தர் (24) அய்யாபிள்ளை மகன் அருணாச்சலம் (41) ஆகியோரை ஏரல் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கை அப்போதைய ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் சொர்ணராணி புலன் விசாரணை செய்து கடந்த 16.9.2020 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி உதயவேலன் நேற்று (3.7.2024) குற்றவாளி முத்துராமலிங்கம் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 26,000 அபராதமும், குற்றவாளி முத்துசுந்தர் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 20,000 அபராதமும், குற்றவாளி அருணாச்சலம் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 20,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் சொர்ண ராணி மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம் மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் அரவிந்த் ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.