தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற ஆசிரியரின் வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்ற திருடன், தன்னை மன்னித்து விடும்படியும் ஒரு மாதத்தில் பணத்தை திருப்பித் தருவதாகவும் உருக்கமாக கடிதம் எழுதி வைத்த சம்பவம் ஆச்சரியத்தையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள மெஞ்ஞானபுரத்தை சேர்ந்தவர் சித்திரை செல்வின். ஓய்வு பெற்ற ஆசிரியரான இவருக்கு மூன்று மகளும், ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் வசித்து வரும் இவரின் மகனுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. ஆகவே, குழந்தையை பார்ப்பதற்காக கடந்த மாதம் 17-ஆம் தேதி தன் மனைவியுடன் சித்திரை செல்வின் சென்னைக்கு சென்றுள்ளனர்.
அப்போது, வீட்டை பராமரிப்பதற்காக செல்வி என்ற பெண்ணிடம் வீட்டு சாவியை கொடுத்து பராமரித்து பார்த்துக் கொள்ளும் படி கூறிவிட்டு இருவரும் சென்னைக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் கடந்த 1–ஆம் தேதி மாலை வீட்டை பெருக்கி சுத்தம் செய்ய வந்த பராமரிப்பு பெண் செல்வி, வீட்டின் கதவுகள் உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சித்திரை செல்வினுக்கும், மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, சித்திரை செல்வின் வீட்டிற்கு வந்த மெஞ்ஞானபுரம் காவல் நிலைய போலீஸார் சித்திரை செல்வினை தொடர்பு கொண்டு பீரோவில் இருந்த பொருட்கள், பணம் மற்றும் நகைகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்து சோதனை செய்தனர். அதில், பீரோவில் வைத்திருந்த ரூ.60 ஆயிரம் பணம், ஒன்றரை பவுன் எடை கொண்ட இரண்டு ஜோடி தங்க கம்மல், ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவை கொள்ளையடிக்கபட்டிருப்பது தெரியவந்தது. மேலும், வீட்டை உடைத்து கொள்ளையடித்த திருடன் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டும் தப்பிச் சென்றுள்ளான்.
அந்த கடிதத்தில் "என்னை மன்னித்து விடுங்கள் நான் இன்னும் ஒரு மாதத்தில் திருப்பி தந்து விடுகிறேன் என் மனைவிக்கு உடம்பு சரியில்லை மருத்துவச் செலவுக்காக திருடினேன்" என உருக்கமாக பச்சை நிற மை பேனாவால் எழுதிய கடிதத்தை கைப்பற்றிய மெஞ்ஞானபுரம் போலீஸார், விசாரணை நடத்தி திருடனை தேடி வருகின்றனர். வீட்டை உடைத்து பணம் நகைகளை கொள்ளையடித்துவிட்டு உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு திருடன் தப்பி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அந்த மர்ம நபர் யார் என்றும் தெரியவில்லை. சித்திரை செல்வின் ஊருக்கு சென்றிருப்பதை நன்றாக அறிந்து வைத்தவர்களே, இப்படியான செயலில் ஈடுபட்டிருக்க முடியும் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனினும், இந்த அளவுக்கு உருக்கத்துடன் எழுதப்பட்ட கடிதத்தின் கைரேகையை வைத்து திருடன் யார் என்று போலீசார் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.