தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மண்டல வாரியான பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் அரசின் பல்வேறு திட்டங்களின் வாயிலாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. மேலும் பகுதி சபா கூட்டங்களும் உரிய காலங்களில் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் கோரிக்கைகள் அனைத்தும் முறையாக பரிசீலிக்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து முடிக்கும் வகையில் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை தோறும் மண்டலம் வாரியாக கோரிக்கைகளை கேட்டு அறிந்து உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் மேயர் தலைமையில் தொடர்புடைய அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மண்டல வாரியாக பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி இன்று புதன்கிழமை காலை வடக்கு மண்டல அலுவலகத்தில் பகுதி சபா கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், வார்டு எண்கள் 1 முதல் 14 மற்றும் 20 பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் ஆணையர் மதுபாலனிடம் மனு அளித்தனர். இதில், மாநகராட்சி அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.