ஓட்டப்பிடாரத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் கடைசி நடை நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஓட்டப்பிடாரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சண்முகராஜ் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தூத்துக்குடி நகர கிளை மேலாளருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புதியம்புத்தூர் ஓட்டப்பிடாரம் பசுவந்தனை வழியாக கப்பிகுளம் செல்லும் 105-பி அரசுப் பேருந்து சுமார் 25 வருடங்களுக்கு மேலாக இயக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த பேருந்தானது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தூத்துக்குடி மண்டலம் தூத்துக்குடி நகர பணிமனையில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இந்த பேருந்தில் கப்பிகுளம், வடக்கு கைலாசபுரம், பசுவந்தனை, வெங்கடாசலபுரம், கீழமுடிமன், ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர் பகுதிகளில் இருந்து விலையும் காய்கறிகளை கப்பி குளம் கிராமத்தில் இருந்து இரவு 9 .20 மணியளவில் கிளம்பி மேற்கண்ட கிராமங்கள் வழியாக தூத்துக்குடி உழவர் சந்தைக்கு கொண்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்தப் பேருந்தானது கடைசி நடையாக தூத்துக்குடிக்கு செல்லாமல் கப்பிகுளம் கிராமத்தில் நிறுத்தப்படுகிறது. இதனால் உழவர் சந்தைக்கு மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் விவசாய பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் வாடகை வாகனங்களில் அதிக விலை கொடுத்து கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது . அதே போல் இந்த பேருந்து கப்பிகுளத்தில் நிறுத்தப்படுவதால் தூத்துக்குடியில் இருந்து அதிகாலை 5 மணி அளவில் செல்லும் ட்ரிப் நிறுத்தப்பட்டதால் தூத்துக்குடிக்கு வெளியூரிலிருந்து வரும் மக்கள் பசுவந்தனை பகுதிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும் இது குறித்து செய்தித்தாள்கள் மற்றும் டிவி சேனல்களிலும் இதுகுறித்து ஒளிபரப்பப்பட்டும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே 105 பி பேருந்தை பழைய நேரப்படி உடனடியாக இயக்கா விட்டால் விரைவில் பஸ் சிறை பிடிக்கும் போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.