பொட்டலூரணி பகுதியில் உள்ள மீன் கழிவு ஆலைகளில் கோட்டாட்சியர் பிரபு தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், பொட்டலூரணி கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பொட்டலூரணி கிராமத்தை சுற்றியுள்ள கழிவு மீன் நிறுவனங்களான என்பிஎம் அசோசியேட்ஸ் மீன் உணவு நிறுவனம், ஜெனிஃபா இந்தியா பிரைவேட் லிமிடெட், மார்க்ஸ்மென் அக்வாட்டிக் ப்ராடக்ட்ஸ் ஆகிய நிறுவனங்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரால் அமைக்கப்பட்ட கூட்டுப் புல தணிக்கை குழுவின் தலைவர் தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில் உள்ளே செலுத்தப்படுகின்ற மீன்களின் தரம் குறித்தும், கம்பெனியின் செயல்பாடுகள் மற்றும் செய்முறைகள் குறித்தும், கம்பெனிகளில் தமிழ்நாடு அரசு மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டும் நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகின்றனவா என்பன குறித்தும், மீன்கள் அவிக்கப்பட்டு வெளியேற்றப்படும் நீரின் மாதிரி சேகரித்தும் அது இறுதியாக வெளியேற்றப்படும் போது வரும் நீரின் மாதிரி சேகரித்து இரண்டிற்கும் உள்ள தரத்தை ஒப்பிட்டு பார்ப்பதற்காகவும் மேலும் கம்பெனிகளை சுற்றி அமைக்கப்பட்ட ஆழ்துளை குழாய்கள் மூலம் நிலத்தடி நீரின் மாதிரியை ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனர்.
மேலும், இந்த ஆய்வின் அறிக்கையினை வருவாய் கோட்டாட்சியர் மாவட்ட ஆட்சியருக்கு சமர்ப்பித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரி ஹேமந்த், கால்நடை பராமரிப்புத்துறை ஜான் சுபாஷ், ஊராட்சிகள் உதவி இயக்குனர் உலகநாதன், கருங்குளம் பிடிஓ முத்துக்குமார், பிளாக் ஹெல்த் சூப்பர்வைசர் வெங்கடேசன், சுகாதாரத்துறை உதவி இயக்குனர் பொற்செல்வன், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமார், எல்லை நாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, வடக்கு காரசேரி கிராம நிர்வாக அலுவலர் சொர்ண லட்சுமி, தெய்வச் செயல்புரம் வருவாய் ஆய்வாளர் அமுதா ஆகியோர் கொண்ட குழு ஆய்வு செய்தது. இந்த தணிக்கையின் போது பொட்டலூரணி கிராமத்தைச் சேர்ந்தவர்களும் உடன் இருந்தனர்.