• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் அருகே குடிநீருக்காக திண்டாடும் மக்கள்... ஜல் ஜீவன் திட்டத்தில் மோசடி? ஒப்பந்ததாரர்; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள கீழ வைப்பார் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் மூலம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. 

ஆனால், இத்திட்டத்தின் மூலம் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு குழாய்கள் அமைக்கப்படாமல் சில வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளது என்று அக்கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

மேலும் இது பற்றி ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிடம் பலமுறை கேட்டும் மீதமுள்ள உள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறுகின்றனர். இதனால் குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்படுவதன் காரணமாக இக்கிராம மக்கள் ஒரு குடம் குடிநீரை ரூ.20க்கு விலைக்கு வாங்கி குடிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். 

அதுமட்டுமின்றி, இத்திட்டத்தின் மூலம் கீழ வைப்பார் ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ரூ.17 லட்சத்தை கீழவைப்பார் ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரியாமலே விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் நிதி மோசடி செய்திருப்பதாகவும், கீழ வைப்பார் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜேசுராஜா குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.


ஏற்கனவே, கீழ வைப்பார் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு இருந்து வந்த சூழ்நிலையில் மத்திய அரசின் திட்டத்தின் மூலம் குடிநீர் குழாய் அமைக்கப்படுவதில் அனைத்து வீடுகளுக்கும் பொருத்தாமல் மோசடி நடைபெற்றுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்து நிலவும் அவல நிலை இருந்து வருகிறது. 

ஆகையால், கீழ வைப்பார் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் குழாய்கள் பொருத்தும் பணிக்கான ஒப்பந்ததாரர் மீதும், ஊராட்சிக்கு தெரியாமல் நிதி மோசடியில் ஈடுபட்ட ஊராட்சி ஒன்றியத்தின் மீதும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்  தீவிர விசாரணை மேற்கொண்டு, கடும் நடவடிக்கை எடுப்பதோடு உடனடியாக அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய்கள் பொருத்தி குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

  • Share on

தலையில் முக்காடு அணிந்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!

முத்தையாபுரம் பகுதியில் பூங்கா : மேயரிடம் பொதுமக்கள் கோரிக்கை!

  • Share on