குரங்கணியில் ஆபத்தான நிலையில் காணப்படும் மரத்தினை அகற்ற அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில், ஏரலுக்கு செல்லும் சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் பழமை வாய்ந்த ஒரு வேப்பமரம் சாலையை நோக்கி சாய்ந்து உள்ளது. தற்போது இந்த மரம் பட்டு போய் நிற்கிறது. திடீரென சிறிய காற்று வீசினாலும் இந்த மரம் சாய்ந்து சாலையில் விழுவதற்கு அதிகமாக வாய்ப்பு உள்ளது. அந்த நேரத்தில் சாலையில் செல்வோர் மீது விழுந்து விபத்து ஏற்படுத்தக்கூடிய அபாய சூழலும் உள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறையிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இந்த மரத்தை அகற்ற முன்வரவில்லை என அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இத்தகைய சூழலில், ஆபத்தான நிலையில் காணப்படும் இந்த மரத்தினை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.