கோவில்பட்டி மின்வாரிய கோட்டம், பசுவந்தனை மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட பசுவந்தனை அரசு மருத்துவமனை முன்பு சேதமடைந்த நிலையில் மின்கம்பம் உள்ளது.
இந்த மின்கம்பத்தை மாற்றம் செய்ய வேண்டி பலமுறை மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்களால் புகார் தெரிவித்த பின்பும் இதுவரை மாற்றம் செய்யப்படாமல் உள்ளது.
தினசரி இந்த அரசு மருத்துவமனைக்கு 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாதம் தோறும் 50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். தற்போது தென்மேற்கு பருவக்காற்று பலமாக வீசுவதால் இந்த மின்கம்பம் ஆடிக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்டத்தை கண்டு மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
ஆகவே, மின்கம்பம் உடைந்து விழுந்து ஏதாவது அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பாக இந்த மின்கம்பத்தை மாற்ற மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.