தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரில் உள்ள பிரதான சாலைகளில் மிகவும் முக்கியமான சாலை புதுரோடு சாலை. இந்த சாலையில் தான் அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, நகராட்சி பள்ளி என அனைத்தும் உள்ளது.
மேலும் ரெயில்வே நிலையத்திற்கு இணைக்கும் முக்கிய சாலையாகவும் இருந்து வருகிறது. இவ்வளவு மிக முக்கியமான சாலையில் போதிய மின் விளக்குகள் வசதி இல்லாததால் இரவு நேரத்தில் சாலைகள் இருளில் மூழ்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது மட்டுமின்றி, பொதுமக்கள் ஒருவிதமான அச்சத்துடனும் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
போதிய மின் விளக்கு வசதி செய்து தர வலியுறுத்தி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை இல்லை. ஆகவே, தேவையான மின்விளக்கு வசதி செய்து தர வலியுறுத்தி கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்பு மாவீரன் பகத் சிங் இரத்ததான கழக அறக்கட்டளையினர் தலைவர் காளிதாஸ் தலைமையில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தேவையான மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்த வலியுறுத்தி கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.
இதில், அமைப்பின் துணைச் செயலாளர் வேல்முருகன், இணைச் செயலாளர் லட்சுமணன், நிர்வாகிகள் கபிரியேல் ராஜா, ராமர், மணி, ராஜ்குமார், கெளதம், தங்கராஜ், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ரவிக்குமார், மகாராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.