• vilasalnews@gmail.com

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : அவங்க மேல கொலை வழக்கு போடுங்க - அதிகாரிகள் மீது கடுகடுத்த உயர்நீதிமன்றம்!

  • Share on

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் மீது சென்னை உயர் நீதிமன்றம்  அதிருப்தி தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே 2018ல் நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் வரை பலியாகினர். தமிழ்நாட்டை உலுக்கிய இந்த கொடூர சம்பவம் தொடர்பாக, அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரித்து காவல் அதிகாரிகள் உள்பட பலர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரைத்தது.

இந்தநிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆர்வலர் ஹென்றி திபேன் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி தாமாக முன்வந்து விசாரணை நடத்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம், வழக்கை முடித்துவைத்து விட்டது. புகார் தாரர் என்ற முறையில் தன்னுடைய விளக்கத்தை கேட்கவில்லை என்றும் குற்றம்சாட்டி இருந்தார்.

எனவே, வழக்கை முடித்து வைத்த தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இந்த வழக்கானது நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில் குமார் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள தூத்துக்குடி டிஎஸ்பி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மனித உரிமை ஆணைய சட்டப்படி ஏற்கனவே முடிக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது. மாநில மனித உரிமை ஆணையமும், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும் விசாரித்த இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது” என வாதிட்டார்.

இதை மறுத்த ஹென்றி திபென் தரப்பு, மனித உரிமை ஆணைய சட்டப்படி மனித உரிமை ஆணையங்கள் பிறப்பிக்கும் உத்தரவை மறு ஆய்வு செய்ய முடியும். அந்த வகையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மீண்டும் விசாரிக்க எந்த தடையும் இல்லை என தனது வாதத்தை முன் வைத்தார்.

மேலும், சிபிஐ தரப்பிலோ, “துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் கூடுதல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கும். மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்வதற்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை” என ஆட்சேபம் தெரிவித்தது.

அனைத்து வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், “மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் யாரும் இதுவரை வருந்தவில்லை. அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு தொடரப்பட வேண்டும்” என்று கருத்து தெரிவித்தனர்.

மேலும் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார்? இதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள் என்றும் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, எதிர் தரப்பினரின் ஆட்சேபங்களுக்கு பதிலளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 15ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

  • Share on

களை கட்ட காத்திருக்கும் தூத்துக்குடி.... 26ஆம் தேதி கொடியேறுகிறது!

பணியில் தரமில்லை... விவகாரத்தை கையில் எடுத்த நாதக - பேரூராட்சியின் விளக்கத்தை தொடர்ந்து போராட்டம் ஒத்திவைப்பு!

  • Share on