இந்தியாவில் கல்வியில் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கிறது. உயர்கல்வியில் இந்தியாவின் இலக்கை எப்போதோ கடந்து முன்னணியில் நாம் இருக்கிறோம். ஆனால், பள்ளிகளில் கழிவறை பராமரிப்பில் தொடர்ந்து ஏமாற்றம்தான் நமக்கு மிஞ்சுகிறதா என்ற கேள்வி எழுகிறது.
அரசுப் பள்ளி பராமரிப்பில் தான் அந்த கவலை ஏற்படும் என்றால், தனியார் பள்ளிகளிலும் இந்த நிலைதான் தொடர்கிறது என்ற தகவல் கூடுதல் கவலையை அளிக்கிறது. அதிலும், தொடக்கப்பள்ளிகளில் கழிவறை வசதி, பாராமரிப்பு இல்லாமல் மாணவர்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலை உண்டாகிக்கொண்டிருக்கிறது.
பள்ளியில் படிக்கும் மாணவர்களையே கழிவறையைச் சுத்தம் செய்யவைப்பது, சுவர் இடிந்து விழுவது, மாணவர்கள் மரணம் என அவ்வப்போது மனதை கனக்கச் செய்யும் செய்திகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆனால், மாற்றம் மட்டும் உண்டாகவில்லை.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் கடந்த ஜூன் 10ம் தேதி திறக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்கிவிட்டது. இரண்டு, மூன்று தவணை முறைகளில் கல்வி கட்டணங்களை வசூலித்த தனியார் பள்ளிகள், கறாராக ஒரே தவணையில் கட்டணத்தை கட்ட வேண்டும் என்று கூறி பெற்றோர்களை விழிபிதுங்க செய்த சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்றது.
இப்படியான சூழலில் தான், தூத்துக்குடியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், குறிப்பாக தனியார் தொடக்க பள்ளிகளில் கழிவறைகளை பராமரிப்பதிலும், பள்ளி வளாகத்தை சுத்தமாக பராமரிப்பதிலும் அக்கறை காட்டாமல் பள்ளி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கழிவறைகளில் இருந்துதான் அதிகளவில் சுகாதார சீர்கேடு மற்றும் தொற்றுகள் ஏற்படுகிறது. எனவே, கழிவறை நவீன முறையில் கட்டப்படாவிட்டாலும் கூட, இருக்கிற கழிவறைகளையாவது சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைக்க பள்ளி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தூத்துக்குடியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அரசு சுகாதாரத் துறை உயரதிகாரிகள் தலைமையிலான குழுக்கள் உடனடியாக பள்ளிகளின் கழிவறைகள், வளாக பராமரிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். முறையான பராமரிப்பு செய்யாத பள்ளி நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசு சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், பெற்றோர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.