• vilasalnews@gmail.com

நிறைவடைந்த மீன்பிடி தடைகாலம் : தூத்துக்குடியில் மீன்களை வாங்க அலைமோதிய கூட்டம்!

  • Share on

மீன்பிடி தடைக்காலம் முடிவு பெற்றதையடுத்து தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் சனிக்கிழமை ( 15.6.24 ) அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று, இரவு திரும்பி வந்த நிலையில், மீன் பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாள்கள் மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டும் தடை விதிக்கப்பட்டது.


அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த மீன்பிடித் தடைக்காலத்தில், மீன்பிடித் துறைமுகம், வேம்பாா், தருவைகுளம் ஆகிய இடங்களில் உள்ள மொத்தம் 551 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த தடை காலத்தில் மீனவா்கள் தங்கள் படகுகளை சீரமைத்தல், வலைகளை சரி செய்தல் போன்ற பணிகளை செய்து வந்தனர். இந்தநிலையில், மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிந்த நிலையில், சனிக்கிழமை ( 15.6.24 )  அதிகாலையில் தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மீன்பிடித்து விட்டு இரவு சுமாா் 8 மணி முதல் கரைக்கு திரும்பி வரத் தொடங்கினா். 2 மாதங்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்ற மீனவா்களின் வலையில் பல்வேறு வகையான மீன்கள் அதிகளவு கிடைத்தது. பிடிக்கப்பட்ட மீன்கள் அனைத்தும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுக ஏலக்கூடத்தில் வைத்து ஏலம் விடப்பட்டன.


மீன்களை வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் என கூட்டம் அலைமோதியதால் மீன்களின் விலையும் அதிக விலைக்கு ஏலம் போனது. போட்டி போட்டு மீன்கள் ஏலம் எடுக்கப்பட்டதால் மீன்களும் உடனுக்குடன் ஏலம் போனது.  பொதுமக்களில் சிலருக்கு மீன்களில் விலை உயர்வாலும், அவர்கள் எதிர்பார்த்து வந்த மீன்கள் விற்று தீர்ந்ததாலும் மீன்கள் வாங்காமலே திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது.

  • Share on

ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் - தாசில்தார் ஞானராஜ் மனுக்களை பெற்றார்!

தூத்துக்குடியில் வீடு இடிந்து விழுந்ததில் இளைஞர் படுகாயம் : கட்டிடத்தின் உறுதித்தண்மை மீது பொதுமக்களிடையே வலுக்கும் சந்தேகம்... மாவட்ட நிர்வாகம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?

  • Share on