தூத்துக்குடியில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் நடைபெறும் ஜுன் மாதத்திற்கான சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து தாசில்தார் ஞானராஜ் மனுக்களை பெற்றார்.
பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, பொது விநியோகத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் சிறப்பு முகாம் அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2 மாதங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைமுறையில் இருந்த காரணத்தால், இன்று ஜுன் மாதத்திற்கான சிறப்பு முகாம் இன்று 15.06.2024 சனிக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை, அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறுகிறது. இதனால், தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற சிறப்பு முகாமில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இருப்பினும், பொதுமக்களை அதிக நேரம் காக்க வைக்காமல் விரைவாக மனுக்களை வாங்கி சிவில் சப்ளை தாசில்தார் ஞானராஜ் நடவடிக்கை மேற்கொண்டார்.
இந்த முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல், போன்ற குறைகள் முகாமில் சரிசெய்து வழங்கப்படுகிறது. மேலும் மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தவறுகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றமும் செய்யப்படுகிறது. மேலும் இம்முகாமில் பொது விநியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெறுகின்றனர்.