• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான அரசு பூங்கா இடம் மோசடியாக விற்பனை : பலே கில்லாடி பெண்ணுடன் சேர்ந்து கூட்டு சதி செய்தாரா தூத்துக்குடி சார் பதிவாளர்? பரபரக்கும் தூத்துக்குடி!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா இடம் ஒன்றை சுமார் 70 லட்சத்திற்கு இளைஞர் ஒருவரை ஏமாற்றி விற்ற கோவையைச் சேர்ந்த பெண் மற்றும் தூத்துக்குடி சார்பதிவாளரின் கூட்டணி மோசடி விவகாரம் தற்போது பதிவுத்துறை வட்டாரத்தையும் தாண்டி தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளைஞர் வெள்ளைச்சாமி என்பவர் தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர், தூத்துக்குடி மாவட்ட பதிவாளர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, பாஞ்சாலங்குறிச்சி இந்திரா நகர் தான் எனது சொந்த ஊர். நான் குடும்பத்தோடு அங்கு வசித்து வருகிறேன். இந்த நிலையில்,  ஓட்டப்பிடாரம் சிலோன் காலனியைச் சேர்ந்த வீரையா என்பவரது மகன் சந்திரசேகர் மற்றும் ஓட்டப்பிடாரம் இந்திரா நகரைச் சேர்ந்த தங்கவேலு மகன் சாமிநாதன் ஆகிய இருவரும் தூத்துக்குடியில் ரஹமத் நகரில் 21 செண்ட் காலி மனை ஒன்று விற்பனைக்கு உள்ளது. அது டெவலப் ஏரியா நீ வாங்கி போடு என்று என்னை அணுகினார். இவர்கள் இருவரும் எனது ஊர் காரர்கள் என்பதால் மேற்படி எவ்வித விசாரணையும் இன்றி அவ்விடத்தை வாங்கலாம் என்று முடிவெடுத்தேன்.

இடம் வாங்குவதற்காக நான் வாழ்நாள் முழுவதும் சேர்த்து வைத்த எனது மணைவி நகைகள், பணம் ஆகியவற்றை கொடுத்தேன். அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி தாலுகா, சங்கரப்பேரி கிராமம் மாலில் சர்வே 89/1A1 நம்பரில், 4379 நம்பர் பட்டாவில் கண்ட சப்டிவிசன்படி சர்வே 203/1A1A1A1 நம்பரில் காட்டியபடி, ரஹமத் நகரில் 21 செண்டு அளவுள்ள தனது பெயரில் உள்ள காலி மனையை கோயம்புத்தூரைச் சேர்ந்த ரா.மீனா என்பவரிடம் அறுபது லட்சத்து முப்பத்தி ஒன்பதாயிரம் ( 60,39,000 ) ரூபாய்க்கு கிரையம் பேசி முடிக்கப்பட்டு, 2021 ஆம் ஆண்டு மார்ச் 3 ம் தேதி எனது மனைவி ராமஜெயந்தி என்பவருக்கு, நிலத்தின் உரிமையாளர் என்று சொல்லக்கூடிய ரா.மீனா என்பவர் தூத்துக்குடி ஜாயிண்ட் 1 சப்ரி ஆபிஸ் சரகம் 1 புத்தகம் 815 ம் நம்பர் ரிஜிஸ்டராக ஜெனரல் பவர் பத்திரம் மூலம் ஜெனரல் பவர் ஏஜெண்டாக எழுதி கொடுத்ததைத் தொடர்ந்து,

அதன் மூலம், வெள்ளைச்சாமி ஆகிய எனக்கு 2021 ஆம் ஆண்டு மார்ச் 5 ம் தேதி அறுபது லட்சத்து முப்பத்தி ஒன்பதாயிரம் ( 60,39,000 ) ரூபாயை கொடுத்து, தூத்துக்குடி ஜாயிண்ட் 1 சப்ரி ஆபிஸ்ல் 849 ம் நம்பர் ரிஜிஸ்டராக கிரைய பதிவு செய்து சொத்தை பெற்றேன். மேலும், புரோக்கர்களான சந்திரசேகர் மற்றும் சாமி நாதன் இருவரும் பத்திர பதிவு செய்ய ஆகும் செலவு என்று சுமார் 10 லட்சம் வரை தனியாக பெற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில், சில காலங்களுக்கு பின்பு தனது சொத்து என மீனா என்பவர் எனக்கு எழுதி கொடுத்து அறுபது லட்சத்து முப்பத்தி ஒன்பதாயிரம் ( 60,39,000 ) ரூபாயை பெற்று கொண்டு விற்ற, மேற்படி நிலத்தினை, தூத்துக்குடி மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட பூங்கா என்றும், தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்றும் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் வேலி அமைத்து அவ்விடத்தை கடந்த 2023 ஆண்டு கையகப்படுத்தி கொண்டது.

இதனையடுத்தே, அரசுக்கு சொந்தமான இடத்தை தன் இடம் என கூறி மீனா என்பவர் விற்று, என்னுடைய பணம் அறுபது லட்சத்து முப்பத்தி ஒன்பதாயிரம் ( 60,39,000 ) ரூபாயை பறித்துக்கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், இவையெல்லாம் தெரிந்தே வேண்டுமென்று மீனாவோடு கூட்டுச்சேந்து கூட்டு சதியில் ஈடுபட்டு போலியாக அரசு இடத்தை விற்பனை செய்ததிற்கு உடந்தையாக இருந்து, பத்திரபதிவில் சார்பதிவாளர் ஆரோக்கியராஜ் என்பவர் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது. 

எனவே, இந்த மோசடி தொடர்பாக, கோவையைச் சேர்ந்த மீனா, தூத்துக்குடி சார்பதிவாளர்  ஆரோக்கியராஜ், சந்திரசேகர், சாமி நாதன்  உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியானது இன்று தினசரி நாளிதழில் வெளிவந்து தூத்துக்குடியை பரபரபாக்கியுள்ளது. மேலும், தங்களுக்கு சொந்தமான இடத்தை தனிநபருக்கு போலியாக விற்று மோசடி செய்த கும்பல் மீது தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

  • Share on

வீட்டிற்கு பின்புறம் கட்டிவைத்திருந்த ஆட்டுக் குட்டியை ஆட்டையப்போட்ட 3 பேர் கைது!

வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்களோடு இணைந்து ஆங்கிலேயரை எதிர்த்த மாமன்னர் தேர்மாறன் கல்லறை விவகாரம் : பள்ளி நிர்வாகம் பயன்படுத்த தடை!

  • Share on