தூத்துக்குடி மாவட்டம் வாகனத்தை ஏற்றி கொலை செய்யப்பட்ட ஏரல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் உடலுக்கு கலெக்டர், மதுரை சரக ஐஜி, தென் மண்டல ஐ.ஜி, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பாலு. இவர் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த முருகவேல் என்பரை பிடித்து விசாரித்தார். அவர் குடிபோதையில் இருந்ததால் அவரை கண்டித்ததுடன் அவரின் வாகனத்தை கைப்பற்றினார். அங்கிருந்து முருகவேல் கிளம்பினார்.
இரவில் உதவி ஆய்வாளர் கொற்கை விலக்கு பகுதியில் பைக்கில் சென்றபோது, அந்த வழியாக வேறு சரக்கு வாகனத்தில் வந்த முருகவேல், உதவி ஆய்வாளர் மீது வாகனத்தை மோதவிட்டார். இதில் பலத்த காயமடைந்த உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை உயர் அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே முருகவேல் விளாத்திகுளம் நீதி மன்றத்தில் சரண் அடைந்தார்.
இந்தநிலையில், உதவி ஆய்வாளரின் சொந்த ஊரான முடிவைத்தானேந்தலில் அவரது உடலுக்கு இறுதி சடங்கு நடந்தது. காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.
அப்போது அவரது உடலுக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மதுரை தென் மண்டல் ஐ.ஜி எஸ். முருகன், நெல்லை சரக டி.ஐ.ஜி ராஜேந்திரன், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செல்வன், தூத்துக்குடி சார் ஆட்சியர் எஸ் சின்ரன்ஜித் சிங் கலோன், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னரசு உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், காவல்துறையினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் இறுதி ஊர் வலத்தில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்