தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் கள்ளக் கடல் நிகழ்விற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே வெப்பம் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா உள்பட பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு பெரும் வெப்பம் பதிவானது. இதையடுத்து கத்திரி வெயில் தொடங்கியதும் மக்களுக்கு வெயில் மீது பயம் மேலும் அதிகரித்தது.
இந்த நிலையில் வருண பகவான் அருளால் ஆங்காங்கே மழையும், கனமழையும் பெய்தது. தமிழகத்தில் பரவலாக மழை பெய்யவும் தொடங்கியது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, கீழடுக்கு சுழற்சி, வங்கக் கடலில் ஏற்பட்ட புயல் காரணமாகவும் கனமழை பெய்தது.
இந்த நிலையில், உலகம் முழுவதுமே கடல் பரப்பின் வெப்பம் அதிகரித்து காணப்படுவதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர். இதனால் இந்த ஆண்டு இறுதியில் அதீத மழை உள்ளிட்ட அசாதாரண வானிலை சூழல்கள் ஏற்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் தென்மாவட்ட கடற்கரைகளுக்கு கள்ளக் கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, அமைதியாக இருக்கும் கடல் எந்த வித காற்று, புயல் , சுழல் இல்லாமல் திடீரென கொந்தளிப்பதுதான் கள்ளக் கடல் பாதிப்பு ஆகும்.
அதாவது சற்று விரிவாக சொல்ல வேண்டுமென்றால் பொதுவாக கடல் சீற்றம் என்பது புயலோ, காற்றழுத்த தாழ்வு நிலையோ, கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தின் போதும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் இது போன்ற எந்த நிகழ்வுகளும் இல்லாமல் பலத்த காற்றின் காரணமாக கடல் சீற்றம் என்பது கள்ளக்கடல் என அழைக்கப்படுகிறது.
எச்சரிக்கையின்படி கன்னியாகுமரியில் கடல் அலை 2.3 மீட்டர் முதல் 2.6 மீட்டர் வரையும், ராமநாதபுரத்தில் 2.7 முதல் 3 மீட்டர் வரையும், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை பொருத்தவரை 2.4 முதல் 2.7 மீட்டர் வரை கடல் அலை எழும்பக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை இரவு 11.30 மணி வரை இந்த எச்சரிக்கை தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கள்ள என்றால் திருட்டு என பொருள். எந்தவித வானிலை முன்னறிவிப்பும் இன்றி திருடன் போல் கடல் சீற்றம் வருவதால்தான் இதை கள்ளக்கடல் என கேரள மக்கள் அழைக்கிறார்கள். இந்த கள்ளக்கடல் நிகழ்வு இரு நாட்களுக்கு தென் தமிழக கடலோர பகுதி மற்றும் கேரளாவில் ஏற்படலாம் என்பதால் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடல் சீற்றம் ஏற்படும் போது கடலோரத்தில் உள்ள படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளாமல் இருக்க சற்று இடைவெளிவிட்டு படகுகளை நிறுத்தி வைக்க வேண்டும். வலைகள் உள்பட மீன்பிடி கருவிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். மக்கள் கடற்கரைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.