மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்த நிலையில் பந்தயத்தில் தோற்றதால் காலை வெட்டிய தூத்துக்குடி அதிமுக தொண்டரை செல்போனில் தொடர்பு கொண்ட சசிகலா அவருக்கு ஆறுதலுக்கு கூறினார். ஆனால், எடப்பாடி பழனிச்சாமியோ அந்த தொண்டரை நேரிலேயே வரவழைத்து நிதி உதவி அளித்துள்ளார்.
நடந்து முடிந்த 2024 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் அதிமுக படுதோல்வியைச் சந்தித்தது. சில இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் 3, 4 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், சிலல இடங்களில் டெபாசிட்டும் பறிபோனது.
இந்நிலையில், அதிமுக தொண்டர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் தூத்துக்குடியைச் சேர்ந்த செல்வகுமார். தூத்துக்குடி திரவியபுரத்தைச் சேர்ந்த செல்வகுமார் 1972 ஆண்டு முதலே அதிமுகவின் தீவிர தொண்டராக இருந்து வந்திருக்கிறார். இந்தநிலையில், தற்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக 30 இடங்களில் வெற்றிபெறும் என அந்த பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் பேசியிருக்கிறார் செல்வகுமார்.
அப்போது அங்கு வந்த திமுக தொண்டர் ஒருவர் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது எனக் கூறியிருக்கிறார். இதை அடுத்து இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியாக அதிமுக தோற்றுவிட்டால் எனது காலை வெட்டிக்கொள்கிறேன் என செல்வகுமார் கூறியிருக்கிறார். இந்த நிலையில் கடந்த ஜுன் நான்காம் தேதி நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.
இதனால் மனமுடைந்த செல்வகுமார் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தனது வலது காலில் வெட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் அதிமுகவினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செல்வகுமார் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களிலும் செய்தித்தாள்களிலும் வெளியானது.
இதனையடுத்து, செல்வகுமாருக்கு ஆதரவாகவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவும் ஓபிஎஸ் டிடிவி தினகரன் அணியினர் சமூக வலைதளங்களில் விமர்சனக் கணைகளை தொடுத்தனர். இந்த நிலையில் செல்வகுமாரை சசிகலா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அதிமுக தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம், நிச்சயம் ஜெயலலிதா பெரிய இடத்திற்கு கொண்டு சென்ற அதிமுக மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரும். சின்னம்மா நான் பார்த்துக் கொள்கிறேன். தொண்டர்கள் யாரும் இதுபோல செய்யக்கூடாது என பேசினார். இதை அடுத்து இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இந்த நிலையில் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மூலம் செல்வகுமாரை சேலத்திற்கு வரவழைத்தார். தொடர்ந்து அவரை தனது வீட்டில் சந்தித்து அவருக்கு நிதி உதவி வழங்கினார். மேலும் அதிமுக நிச்சயம் சோதனைகளில் இருந்து வெளிவரும் இனி இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அவரிடம் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
சாதாரண தொண்டரான செல்வகுமாரை சசிகலா தொலைபேசியில் தான் தொடர்பு கொண்டு பேசினார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ வீட்டிற்கே வரவழைத்து நிதியுதவி அளித்து ஆறுதல் கூறியுள்ளார். இதுதான் உண்மையான தொண்டனுக்கு செலுத்தும் மரியாதை என தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி கெத்து காட்டி வருகின்றனர்.