தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் பட்டா விவகாரம் தொடர்பாக விண்ணப்பித்த தொழிலாளியிடம் ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக நில அளவையா் நேற்று கைது செய்யப்பட்டாா்.
விளாத்திகுளம், சாலையம் தெருவைச் சோ்ந்த சங்கரலிங்கம் மகன் சிவலிங்கம் (50). பெயிண்டரான இவா், சிதம்பர நகரில் உள்ள தனது 3.4 சென்ட் நிலத்துக்கு பட்டா மாறுதல் கேட்டு கடந்த 2ஆம் தேதி இணையதளத்தில் விண்ணப்பித்தாா்.
20 நாள்களைக் கடந்தும் பதில் இல்லாததால், விண்ணப்பத்தைப் பரிசீலிக்க வேண்டி நில அளவையா் செல்வமாடசாமியை (41) அணுகினாராம். அவா் விண்ணப்பத்தைப் பரிசீலிக்க ரூ. 4 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். சிவலிங்கம் ரூ. 3 ஆயிரம் கொடுப்பதாகக் கூறினாராம்.
ஆனாலும், லஞ்சம் கொடுக்க விரும்பாத அவா், மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. பீட்டா் பால்துரையிடம் புகாா் தெரிவித்தாா். அவரது அறிவுரைப்படி, ரசாயன பவுடா் தூவிய பணத்தை, புதன்கிழமை மதியம் விளாத்திகுளம் அருகே சுப்பிரமணியபுரம் விலக்கில் உள்ள தனியாா் வணிக நிறுவன வளாகத்தில் செல்வமாடசாமியிடம் சிவலிங்கம் கொடுத்தாா்.
அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா் சுதா, உதவி ஆய்வாளா் தளவாய் ஜம்புநாதன், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் பாண்டி, சுந்தரவேல், கோமதிநாயகம், போலீஸாா் செல்வமாடசாமியைக் கைது செய்தனா். பின்னா், அவரை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்துவிட்டு, தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்றனா்.