ஓட்டப்பிடாரம் அருகே மோட்டார் பைக்கை தீ வைத்து எரித்ததாக 2 பேரை பசுவந்தனை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள ராமச்சந்திரா புரத்தைச் சோ்ந்தவா் கணேஷ் குமாா்(28). இவா், ஓட்டப்பிடாரம் அருகே செவல்பட்டி கிராமத்தில் தங்கியிருந்து ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறாா். இந்நிலையில், இவா் தனது பைக்கை, அதே பகுதியில் உள்ள அய்யாதுரை என்பவா் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தாராம்.
அந்த பைக்கை மா்ம நபா்கள் அதிகாலையில் தீ வைத்து எரித்துவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கணேஷ்குமாா், பசுவந்தனை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
விசாணையில், கணேஷ்குமாரின் பைக்கை எரித்தது, அதே பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் (29), தினேஷ் (22) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவா்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.