தூத்துக்குடி அருகே வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக சட்டவிரோதமாக எரிவாயு சிலிண்டர்களை பதுக்கிய முதியவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி அருகே உள்ள புதியம்புத்தூர் பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சிலர் வாங்கி வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதாக தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, புதியம்புத்தூர் வட்டத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, சமையல் எரிவாயு சிலிண்டரை பதுக்கி வைத்த முதியவர் தங்கராஜ் ஞானமுத்து (74) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 சமையல் எரிவாயு சிலிண்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், புதியம்புத்தூர் பகுதியில் எரிவாயு சிலிண்டர்களை வாங்கி, வடமாநில தொழிலாளர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.