திருநெல்வேலி மாவட்டம், கேடிசி நகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலின் முன்பு இளைஞர் ஒருவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு அடுத்த வாகை குளத்தைச் சேர்ந்தவர் தீபக் ராஜா(30). இவர் இன்று (மே 20) தனது காதலியுடன் பாளையங்கோட்டை அருகே கேடிசி நகரில் உள்ள பிரபல ஹோட்டலில் உணவருந்தச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று ஹோட்டல் வாசலில் வைத்து தீபக் ராஜாவை அரிவாளால் சரமாரியாக தாக்கி உள்ளனர். இந்த தாக்குதலில், சம்பவ இடத்திலேயே தீபக் ராஜா உயிரிழந்தார்.
இது குறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த பாளையங்கோட்டை போலீசார் மற்றும் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் ஆதர்ஷ் பச்சேரா உள்ளிட்ட அதிகாரிகள் தீபக் ராஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், தீபக் ராஜா மீது ஏற்கனவே கொலை வழக்குகள் உள்பட சில வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற இரட்டை கொலை மற்றும் திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் நடைபெற்ற மற்றொரு கொலை வழக்கிலும் தீபக் ராஜாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், தீபக் ராஜா தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியனின் ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது. எனவே, சாதிய மோதல் காரணமாகவே தீபக் ராஜா கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை சம்பவம் நடைபெற்ற ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். ஆள் நடமாட்டம் மிகுந்து காணப்படும் சாலையில், பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.