திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடல் பகுதியில் மிதக்கும் ஜெல்லி மீன்கள் குறித்து பக்தா்கள் கவனமாக இருக்குமாறு கோயில் நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோவில் கடற்கரையில் அதிகளவில் கண்ணாடி போன்ற ஜெல்லி மீன்கள் கரை பகுதியில் ஒதுங்குகின்றன. இதனால் பக்தர்களுக்கு தோல் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் நேற்று கடலில் பிடிப்பட்ட ஜெல்லி மீன்கள் குறித்து கோவில் கடலோர பாதுகாப்பு குழுவினர், கோவில் இணை ஆணையர் கார்த்திக் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து கடலோரப் பாதுகாப்பு குழுவினர் கூறுகையில், ‘திருச்செந்தூர் கோவில் கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக அதிக ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குகின்றன. இதனால் பக்தர்களுக்கு தோல் அலர்ஜி மற்றும் ஊறல் ஏற்படுகிறது. இந்த வகை மீன்கள் தமிழ் மாதம் பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் கடற்கரையில் காணப்படும். கண்ணாடி போன்று இந்த மீன்கள் சிவப்பு நிறத்தில் இருந்தால் அதிக விஷத்தன்மை கொண்டதாகும். கடலில் குளிக்கும் பக்தர்கள் மேல் பட்டதும் ஊறல் ஏற்படுகிறது. சில சமயம் ஊறல் ஏற்படுவதோடு தீப்பட்டது போல் தோல் உரிந்து விடுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தும், என்றனர்.
இதுகுறித்து கோவில் இணை ஆணையர் கார்த்திக் கூறுகையில், கோவில் கடற்கரையில் ஜெல்லி வகை மீன்கள் அதிக அளவில் காணப்படுவதாக என்னிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மீன்வளத்துறைக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டு, ஜெல்லி மீனின் தன்மை குறித்து பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும் இது போன்ற ஜெல்லி வகை மீன்களால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த கோவில் வளாகத்தில் உள்ள முதலுதவி சிகிச்சை மையத்தில் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் கடற்கரையில் எச்சரிக்கை பலகை வைக்கப்படும். என கூறினார்.