பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலய திருவிழாவை சிறப்பாக நடத்தி முடித்த வீரசக்கதேவி ஆலயக்குழு நிர்வாகிகளுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு பக்தர்கள், கட்டபொம்மன் வம்சாவழியினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சியில் இந்திய சுதந்திரப்போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வமான வீரசக்கதேவி ஆலயத்தின் 68-வது ஆண்டு விழா கடந்த மே 10, 11 ஆகிய இரு தினங்கள் நடந்து முடிந்தது. கணபதி ஹோமம் விழா கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவானது, மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை தொடர்ந்து கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அன்னதானம் சாப்பிட்டனர்.
மாலை 6 மணிக்கு கோவில் வடக்கு மேடையில் நாதஸ்வர நிகழ்ச்சி, கருத்தரங்கம், பட்டிமன்றம் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் நடந்தது. அதே போல் இரவு 7 மணிக்கு தெற்கு மேடையில் இன்னிசை கச்சேரி மற்றும் சிறுவர்களின் கிராமிய கலை நிகழ்ச்சி, தேவராட்டம் உள்ளிடவைகள் நடந்தது. பெண்கள் ஆலயம் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர்.
திருச்செந்தூர், கயத்தாறு, வைப்பாறு, பாளையங்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை நினைவு ஜோதியை வீரசக்கதேவி ஆலயத்துக்கு கொண்டு வந்தனர். அந்த ஜோதிகளை ஆலய குழு தலைவர் முருகபூபதி பெற்று கொண்டார்.
மேலும், அரசு சார்பில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் 2000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், வீரசக்கதேவி ஆலயத்தின் 68-வது ஆண்டு விழா அமைதியான மற்றும் பாதுகாப்பான முறையில் சிறப்பாக நடத்தி முடித்த வீரசக்கதேவி ஆலயக்குழு தலைவர் முருகபூபதி, செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சுப்புராஜ் சௌந்தர் மற்றும் நிர்வாகிகள் ஆகியோருக்கும், அவர்களோடு இணைந்து நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்கிய தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல் துறை ஆகியோருக்கும் திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்களும், வீரபாண்டிய கட்டபொம்மன் வம்சாவழியினரும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
எஸ்பிக்கு வீரசக்கதேவி ஆலயக்குழு நன்றி
பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலயத்தில் 68 ஆம் ஆண்டு திருவிழாவை மிகவும் சிறப்பாக நடத்திடும் வகையில் உரிய பாதுகாப்பு வழங்கிய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனை, வீரசக்கதேவி ஆலயக்குழு தலைவர் முருகபூபதி தலைமையில் நிர்வாகிகள் நேரில் சந்தித்து பொன்னாடை போற்றி தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.