• vilasalnews@gmail.com

தரமற்ற உணவு... தூத்துக்குடியில் மூடப்பட்ட பிரபல அசைவ உணவகம் - உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை

  • Share on

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள ஹனிஃபா பிரியாணி கடையில் 38 கிலோ பழைய சிக்கன், சாதம், எண்ணெய் கத்திரிக்காய், பரோட்டா/சப்பாத்தி மாவு மற்றும் பிரட் ஹல்வா ஆகியவை பறிமுதல் செய்து அழித்து, அதன் உணவு பாதுகாப்பு உரிமம் தற்காலிக ரத்து செய்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, உணவு பாதுகாப்பு ஆணையர் (பொ) ஹரிஹரன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி ஆகியோரின் உத்திரவின் பேரில், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன் தலைமையின் கீழ் தூத்துக்குடி மாநகராட்சி பகுதி-2-ன் உணவு பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து ஆகியோர் அடங்கிய குழுவானது தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட எட்டயபுரம் சாலையில் உள்ள அசைவ ஹோட்டலான ஹனிஃபா பிரியாணி என்ற கடையில் இன்று (15.05.2024) திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

அந்த ஆய்வின் போது, நேற்று சமைத்து, விற்பனையாகாமல் மீதமாகி, ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த 2.3 கிலோ சிக்கன், 3 கிலோ மட்டன், 1.6 கிலோ மீன் வகை, 3 கிலோ சோறு, 6 கிலோ எண்ணெய் கத்திரிக்காய், 2.7 கிலோ பிரட் ஹல்வா, 2.3 கிலோ நூடுல்ஸ், 15 கிலோ சப்பாத்தி மற்றும் பரோட்டா மாவு, தேதி குறிப்பிடப்படாமல் முன் தயாரிப்பு செய்து ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த 3 கிலோ சிக்கன், காலாவதி தேதி குறிப்பிடப்படாத 2 கிலோ அரசி மாவு, காலாவதியான 3 லிட்டர் சோயா சாஸ் ஆகியவை கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு, அவை மாநகராட்சி குப்பைத்தொட்டியில் கொட்டி அழிக்கப்பட்டது.

மேலும், உணவகத்தின் சமையலறை தூய்மையற்றும், சிலந்தி வலைகளுடன் காணப்பட்டதுடன், தண்ணீர் பகுப்பாய்வு அறிக்கையும் இல்லை. பணியாளர்களுக்குத் தொற்றுநோய்த் தாக்கமற்றவர்கள் என்ற சான்றிதழும், இருப்பு பதிவேடுகளும் இல்லை. மேலும், சமையலறை நுழைவு வாயிலில் சிமெண்ட் மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மேலும், ரெஸ்டாரண்ட் வகைக்கு உணவு பாதுகாப்பு உரிமம் பெறாமல், ரெஸ்டாரண்ட் தொழில் நடத்திவருவதும் உறுதியானது. எனவே, “ஹனிஃபா பிரியாணி” என்ற பெயரில் ஃப்ரான்சைஸ் எடுத்து, லிவிங்ஸ்டா என்பவருக்குச் சொந்தமான மேற்படி ஹனிஃபா பிரியாணி என்ற கடையின் உணவு பாதுகாப்பு உரிமத்தினை தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய தீர்மானித்து, உத்தரவு வழங்கப்படவுள்ளது. எனவே, அடுத்த அறிவிப்பு வரும் வரை அதனை இயக்க இயலாது. மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்படுகின்றது.

மேலும், நுகர்வோர்களுக்கு உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகக் கட்செவி எண்ணிற்கோ அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் TN Food Safety என்ற புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

  • Share on

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்!

பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலய 68 ஆம் ஆண்டு திருவிழா : விழா குழுவிற்கும், அரசிற்கும் கட்டபொம்மன் வம்சாவழியினர் வாழ்த்து!

  • Share on