ஓட்டப்பிடாரம் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே குப்புனாபுரம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு பூப்புனித நீராட்டு விழா நடந்தது. இதில், பெரிய நத்தம் கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுவிட்டு நேற்று முன்தினம் இரவு வேனில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். வேனை பெரிய நத்தம் கிராமத்தைச் சேர்ந்த முருகாண்டி (45) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
வேன் ஓசநூத்து- ஓட்டப்பிடாரம் சாலையில் பால்பண்ணை அருகே வளைவு பகுதியில் வந்தபோது, எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி சாலைஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த இருளப்பன் (வயது 45), வேல்தாய் (53), செல்வி (50), முத்தம்மாள் (55), முத்துலட்சுமி (26), செல்வராணி (41), ஜீவரத்தினம் (54), மாரியப்பன் (42), சண்முகலட்சுமி (45), முத்துக்கனி (35), முத்துமாரி (45), மாடத்தி (50), இருளம்மாள் (62), வேம்பு (45), அஞ்சுரா (70), முத்துமாரி (48), கனகம்மாள் (45), ராம செல்வி (30), சக்கரத்தாய் (55) மற்றும் நான்கு வயது உடைய குழந்தை உள்ளிட்ட 20 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவத்தை அறிந்த ஓட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் ராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
எம்எல்ஏ ஆறுதல்
வேன் கவிழ்ந்து படுகாயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது மருத்துவர்களிடம், காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அரசு வழக்கறிஞர் பூங்குமார் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உடனிருந்தனர்.