• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த அடுத்தடுத்து தொடர் கொலைகள்... ஏன்? எதற்கு? - எஸ்பி விளக்கம்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த கொலைகள் கஞ்சா, மதுபோதையில் நடந்ததாகவும், இரவில் மக்கள் வெளியே நடமாடப் பயப்படும் அளவிற்கு கொலைகள் அரங்கேறி வருவதாகவும் பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியானதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  மறுப்பு தெரிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நேற்று வெளியான பத்திரிகை செய்தி ஒன்றில் தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் 6 கொலைகள், இதில் 4 கொலைகள் மது, கஞ்சா போதையில் நடந்திருப்பதாகவும், இரு கொலைகள் மட்டும் குடும்ப பிரச்சனை காரணமாக நடந்திருப்பதாகவும், இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், இரவில் மக்கள் வெளியே நடமாட பயப்படும் அளவிற்கு கொலைகள் அரங்கேறி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த செய்திதான் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் மற்றும் தென்பாகம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்த கொலைகள் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாகவும், சொத்து பிரச்சனை காரணமாகவும் கணவர்கள் மனைவியை கொலை செய்ததாகவும், தாயை, தந்தை திட்டி, அடிக்கச் சென்றதால் மகன் அதை தடுத்து நடந்த தகராறில் தந்தையை மகன் கொலை செய்ததாகவும் புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் நேற்று இரவு நடந்த மருந்து கடை உரிமையாளர் செந்தில் ஆறுமுகம் என்பவர் கொலை வழக்கிலும் குடும்பத்திற்குள் ஏற்பட்ட சொத்து பிரச்சனை காரணமாக அவரது சொந்த தங்கையின் கணவரே கொலை செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்த இரு கொலைகளும், தெரிந்து நன்கு பழகிய நண்பர்களுக்குள்  குடும்பத்தைப் பற்றி அவதூறாக பேசியதால் திடீரென ஏற்பட்ட ஆத்திரத்தில் நடந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவவந்துள்ளது. அதே போன்று மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நெருங்கிய நண்பர்களுக்குள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் ஏற்பட்ட தகராறில் நடந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நடந்த அனைத்து கொலைகளிலுமே சம்மந்தப்பட்ட நபர்கள் உடனுக்குடன் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 52 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்கள் மீது விரைந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

மேற்கூறிய 6 சம்பவங்களில், ஒன்று மகன் தந்தையையும், 2 சம்பவங்கள் கணவர்களாலும், மற்றொன்று சொந்த தங்ககையின் கணவராலும் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் நடந்துள்ளது. மீதம் உள்ள 2 கொலைகளும்  நெருங்கிய பழகிய நண்பர்களுக்குள்ளே திடீரென ஏற்பட்ட பிரச்சனையில் நடந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே மேற்கண்ட சம்பவங்களை கஞ்சா போதையில் நடந்துள்ளதாக மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளது முற்றிலும் மறுக்கப்படுகிறது. மேலும் பொதுமக்களிடையே இதுபோன்ற உறுதிபடுத்தாத, அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை வெளியிட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  மறுப்பு தெரிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

  • Share on

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா : தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

தூத்துக்குடிக்கு வருகை தந்த தலைமை தேர்தல் அதிகாரி : விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் வரவேற்பு!

  • Share on