தூத்துக்குடி மாவட்டத்தில் வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு இன்று (மே 9) மாலை 6 மணி முதல் 12ம் தேதி காலை 6 மணி வரை 144- தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
"தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் 10.05.2024 மற்றும் 11.05.2024 தேதிகளில் நடைபெறவுள்ள வீரசக்கதேவி ஆலய திருவிழா அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திடவும், 09.05.2024 மாலை 6 மணி முதல் 12.05.2024 காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், தூத்துக்குடி மாவட்டத்திலிருந்தும் பிற மாவட்டங்களிலிருந்தும்; வந்து விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் வாள், கத்தி, கம்பு, போன்ற அபாயகரமான ஆட்சேபகரமான ஆயுதங்கள் ஊர்வலமாக கொண்டு வருவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் திருவிழாவிற்கு கலந்து கொள்ள அழைத்து வரப்படுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்தடை உத்தரவிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் தினசரி செல்லும் ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள், அன்னதானம் மற்றும் ஊர்வலங்கள் நடத்தவிருப்பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை அணுகி முன் அனுமதி பெற்றுக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இத்தடையுத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்குப் பொருந்தாது என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.