பிளஸ் 2 பொதுத் தேர்வில் தூத்துக்குடி சாமுவேல்புரம் மாநகராட்சி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளதற்கு மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்:-
தூத்துக்குடி மாநகராட்சி சாமுவேல்புரம் பள்ளியானது நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர் பெருமக்களுக்கும் மாணவ மாணவியர்களின் பெற்றோர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நேரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வார்த்தையின்படி பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும். இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள் முன்னேற்றத்துக்கான துணையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள் என்று வாழ்த்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் சாமுவேல்புரம் மாநகராட்சி பள்ளியில் 33 மாணவர்கள், 28 மாணவிகள் என மொத்தம் 61பேர் தேர்வு எழுதினர். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 500 மதிப்பெண்களுக்கு மேல் 19 பேர் எடுத்துள்ளனர். அதிகபட்சமாக மாணவர் இன்பராஜ் 560 மதிப்பெண்களும், மாணவர் அஜிஸ் 560 மதிப்பெண்களும் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.