விளாத்திகுளம் பகுதியில் நடைபாதை கடை வியாபாரிகளை அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை மூலமாக வியாபாரம் செய்ய விடாமல் தொகுதி திமுக எம்எல்ஏ உள்ளிட்டோர் மறைமுக இடையூறு செய்வதாகவும், இச்செயலை கண்டித்து தோழமை கட்சியினருடன் இணைந்து கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.
திமுக ஆட்சியின் மீதும், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் செயல்பாடுகள் மீதும் அதிர்ப்தி கொண்டு, திமுகவில் இருந்து விலகியவர்கள் மற்றும் திமுக ஆட்சிக்கு எதிரான கருத்துக்களை சமூக வலைதளங்கள் உள்ளிட்டவைகள் மூலம் தெரிவித்து வரும் நடைபாதை வியாபாரம் உள்ளிட்ட தொழில்களை செய்துவரும் நபர்கள் மீது, தனிப்பட்ட முறையில் காழ்புணர்ச்சி கொண்டு, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறை மூலம், அவர்களை வியாபாரம் செய்ய விடாமல், பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்திவருதாக புகார் எழுந்துள்ளது.
அந்த வகையில், புதூர் யூனியன் கவுன்சிலர் பெருமாள்சாமி என்பவர் திமுகவில் இருந்து சமீப காலத்திற்கு முன்பு அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில், விளாத்திகுளம் மீனாட்சி அம்மன் கோவில் அருகே வைக்கப்பட்டிருந்த அவரது பானி பூரி கடையை, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் தூண்டுதலின் பேரில் அரசு அதிகாரிகள் மூலம் அப்புறப்படுத்தியுள்ளனராம். இதனையடுத்து, விளாத்திகுளம் கண்மாய் கரை அருகே அவர் கடை வைத்துள்ளார். அந்த கடையையும் காவல்துறை மூலம் அப்புறப்படுத்தப்பட்டதாம். இவைகளுக்கு காரணம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் தான் என புகார் தெரிவிக்கின்றார் யூனியன் கவுன்சிலர் பெருமாள்சாமி.
இதனையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணையின் படி, வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ வழிகாட்டுதலின் படி, விளாத்திகுளம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் அதிமுகவினர் மற்றும் அதன் தோழமை கட்சியினர் மற்றும் பாதிக்கப்பட்ட வியாபாரிகள், பொதுமக்களோடு இணைந்து, விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளரை சந்தித்து முறையிட்டு புகார் தெரிவிக்க உள்ளதாகவும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் விளாத்திகுளத்தில் திமுகவின் அராஜக செயலை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.