தூத்துக்குடியில் வங்கியின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி சிதம்பர நகரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இந்த வங்கியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் ஷட்டரில் இருந்த 4 பூட்டுக்களை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்த கதவை உடைக்க முயன்றுள்ளனர். அதனை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் தப்பியது.
இது குறித்து வங்கியின் முதுநிலை மேலாளர் அனுகிரகா (36) என்பவர் நேற்று தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், வடமாநில வாலிபர்கள் போல் தோன்றும் 4 மர்ம நபர்கள் கடப்பாறையால் பூட்டை உடைப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.