• vilasalnews@gmail.com

தேர்தல் புறக்கணிப்பு; ஆளும் கட்சி அமைச்சர் விரட்டி அடிப்பு;கள்ள ஓட்டு போட வந்த கும்பல் சிறைபிடிப்பு - பரபரக்கும் தூத்துக்குடி!

  • Share on

தூத்துக்குடி அருகே மீன் கழிவு ஆலையை அகற்ற வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டிருந்த நிலையில், கள்ள ஓட்டு போட வந்த கும்பலை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் நூறுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் 39 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், 

தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் கிராமத்தின் அருகே உள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று பிற்பகல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அந்த கிராமத்திற்கு திமுகவினருடன் காரில் சென்றுள்ளார்.

அப்போது, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராம மக்கள் அனிதா ராதாகிருஷ்ணன் காரை விட்டு இறங்கவிடாமல், இவ்வளவு நாள் எங்கே போயிருந்தீர்கள்? இப்போது ஏன் வருகிறீர்கள் எனக் கூறி பேச்சுவார்த்தை வேண்டாம். நாங்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடத்தான் போகிறோம், பின்வாங்க மாட்டோம் எனக் கூறி விரட்டி அடித்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதைத்தொடர்ந்து, பொட்டலூரணி கிராமத்திற்குள் ஸ்கார்பியோ காரில் வந்த ஒரு கும்பல் கள்ள ஓட்டு போட முயன்றுள்ளது. இது குறித்து கிராம மக்கள் புகார் அளித்தனர்.  உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் கள்ள ஓட்டு போட வந்தவர்களை பிடித்து ஒரு வேனில் அழைத்து சென்றனர். அப்போது கிராம மக்கள் வேனை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன், ஸ்கார்பியோ காரையும் சிறை பிடித்தனர். மேலும் அந்த காரில்  மதுபான பாட்டில்கள் கத்தி, அருவா, கம்பு இருந்ததாக கூறப்படுகிறது. வேன் மற்றும் ஸ்கார்பியோ காரை சுற்றி கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் வேனின் கண்ணாடி உடைக்கப்பட்டது. பரபரப்பான சூழலில் காவல்துறையினர் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் கள்ள ஓட்டு போட வந்தவர்களை அழைத்துச் சென்றனர்.

ஆளும் கட்சி அமைச்சர் விரட்டி அடிப்பு, கள்ள ஓட்டு போட முயன்ற கும்பலை கையும் களவுமாக பிடித்தல், தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட சம்பவங்களால் பொட்டலூரணி கிராமத்தில் பரபரப்பான சூழல் இன்று நிலவியது.

  • Share on

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மாலை 5 மணி வரை பதிவான வாக்குகள் நிலவரம்!

தேர்தல் களேபரம் - தூத்துக்குடியில் அதிமுக, திமுக மோதல்!

  • Share on