தூத்துக்குடியில் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்கி உள்ளார்களா என்று போலீசார் விடுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து இன்று முதல் வாக்குப்பதிவு முடியும் வரை வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிப்புக்காக தேர்தல் பிரச்சாரம், ஊர்வலம், பொதுக் கூட்டம், கச்சேரிகள் நடத்த முழுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளராக இல்லாதவர்கள், வேறு தொகுதியை சேர்ந்தவர்கள் தேர்தல் பிரசாரத்துக்காக வந்தவர்கள் பிரசாரம் முடிவடைந்த உடன் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். திருமண மண்டபங்கள், விடுதிகள் உள்ளிட்டவற்றில் போலீசார் சோதனை நடத்தி உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
அதே போன்று வாக்குப்பதிவு நாளில் வாக்காளர்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து செல்வதற்காக எந்த வாகனத்தையும் வேட்பாளர்கள் பயன்படுத்தக் கூடாது. அரசியல் கட்சியினர், வேட்பாளர்களால் அமைக்கப்படும் தற்காலிக பிரசார அலுவலகம் வாக்குச்சாவடி மையத்தில் இருந்து 200 மீட்டருக்கு அப்பால் மட்டுமே அமைக்கப்பட வேண்டும். இந்த அலுவலகத்தில் வாக்காளர் எண் சரிபார்ப்புக்காக மட்டும் குற்ற பின்னணி இல்லாத 2 நபர்கள் ஈடுபடுத்தப்படலாம். இந்த தற்காலிக அலுவலகத்தில் தேவையற்ற கூட்டம் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த 48 மணி நேரத்துக்கு தொகுதியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ள வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தொகுதி தேர்தல் அலுவலர் லட்சுமிபதி தலைமை தாங்கினார். தேர்தல் பொது பார்வையாளர் திவேஷ் ஷெஹரா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் தூத்துக்குடி தொகுதியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட எஸ்.பி., பாலாஜி சரவணன், தேர்தல் செலவின பார்வையாளர்கள் எஸ்.எஸ்.ஸ்ரீஜூ, அஜய் ரூமல் கர்டே, தூத்துக்குடி டி.எஸ்.பி., கேல்கர் சுப்ரமண்ய பாலசந்திரா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து நேற்று இரவு முழுவதும் போலீசார் தூத்துக்குடி பகுதியில் உள்ள விடுதிகள், சமுதாய நலக்கூடங்கள், ஓட்டல்களில் தேர்தல் பிரசாரத்துக்காக வந்த வெளியாட்கள் யாராவது தங்கி உள்ளார்களா என்று சோதனை நடத்தினர். மேலும் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்படுகிறதா என்றும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பணம் வினியோகிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் நபர்களின் நடமாட்டத்தை பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.