தூத்துக்குடி தொகுதியில், திமுகவிற்கு எதிரான வாக்குகளை அதிமுக மற்றும் தமாக பிரிக்கும் என்றும், கனிமொழிக்கு எதிராக பிரபலமான வேட்பாளர்கள் இல்லை என்பதால், எளிதாக வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டாலும், மாற்று பார்வைகளும் களநிலவரம் கடைசி கட்டத்தில் வேறு ஒன்றை முன்வைக்கின்றன.
மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் 2வது முறையாக மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகளும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சகோதரியுமான திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி போட்டியிடுகிறார். இதன் மூலம் தூத்துக்குடி தொகுதி இந்த முறையும் ‘ஸ்டார்’ தொகுதியாக கவனம் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19-ம் தேதிக்கு இன்னும் ஒரு வார நாட்களே இருப்பதால், அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதே நேரத்தில், ஒவ்வொரு தொகுதியிலும் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்று களநிலவரவும் அலசப்படுகிறது.
அந்த வகையில், தூத்துக்குடி தொகுதியையும் மாற்று பார்வைகளோடு களநிலவரத்தை ஆராயும் போது கடைசி கட்டத்தில் வேறு விதமாக தகவல்கள் கிடைக்கின்றன.
அதாவது, 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழிக்கும், அப்போதைய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால், கனிமொழி 5,63, 143 வாக்குகள் பெற்று பெரும் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜன், 2,15,934 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தார். அதாவது, சுமார் 3 லட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தமிழிசை தோல்வியடைந்தார்.அப்போது, பாஜக - அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
இந்த முறை 2024 மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. தூத்துக்குடியில் இந்த முறை கனிமொழியை எதிர்த்து அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தூத்துக்குடி தொகுதி தமாகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், தமாக சார்பில் எஸ்.டி.ஆர். விஜயசீலன் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனால், தூத்துக்குடி தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இந்த மக்களவைத் தேர்தலில், கனிமொழி போட்டியிடும் தூத்துக்குடி தொகுதியில், திமுகவுக்கு எதிரான வாக்குகளை அதிமுக மற்றும் தமாக பிரிக்கும் என்றும், அவருக்கு எதிராக பிரபலமான வேட்பாளர்கள் யாரும் இல்லை என்பதால், கனிமொழி எளிதாக வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டாலும்,
ஸ்டெர்லைட் விவகாரத்தில் பாஜக ஆலைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பதால், பாஜக-வுக்கு எதிராக ஒரு அதிருப்தி நிலவுவதாலும், அங்கே பாஜக-வைச் சேர்ந்த பெரிய தலைவர்கள் யாரும் பெரிய அளவில் பிரச்சாரம் செய்யவில்லை. மேலும், வசதி படைத்த பெரிய குடும்ப பின்புலத்தை கொண்டாலும் மக்களுக்காக எஸ்.டி.ஆர். விஜயசீலன் பெரிதாக எதுவும் செய்யவில்லை. இதனால், தமாக சார்பில் போட்டியிடும் எஸ்.டி.ஆர். விஜயசீலனின் சைக்கிள் சின்னத்தின் வேகம் குறைந்தால் தூத்துக்குடி தொகுதியில் இருமுனை போட்டி என்கிற நிலைக்கு செல்லும் என்று கூறுகிறார்கள்.
அந்த அடிப்படையில் தூத்துக்குடியில் திமுக எதிர்ப்பு வாக்குகள் ஓரணியில் திரண்டால் அது கனிமொழிக்கு எதிராக முடியலாம். அது நடந்தால் கடைசி நேரத்தில் கனிமொழிக்கு சிக்கல் அதிகரிக்கலாம் என்று கூறுகிறார்கள்.
இதனால், தூத்துக்குடியில் பாஜக அணியில், சைக்கிள் கொஞ்சம் வேகம் குறைந்தாலும் கனிமொழிக்கு சிக்கல் என்பதாகவே களநிலவரம் உள்ளது. ஆனாலும், தூத்துக்குடியில் கனிமொழியின் வெற்றி என்பது உறுதி. ஆனால் 5 முதல் 6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தை திமுகவினர் எதிர்பார்க்கின்றனர். அது கிடைத்தால் மட்டுமே அவர்கள் முழு வெற்றியை உணர்வார்கள். அதே வேளையில் கடந்த முறை கனிமொழி பெற்ற வாக்கு எண்ணிக்கையில் வித்தியாசம் குறைந்தாலும் அவை திமுக ஆட்சியின் மீதான அதிர்ப்தி அல்லது கனிமொழி மீதான அதிர்ப்தியின் வெளிப்பாடாக கருத்தப்படும் என்பதால், மிகவும் கவனமாகவும், வேகமாகவும் இறுதி கட்டத்தில் திமுக தேர்தல் பணிகளை கொண்டு செல்ல வேண்டும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.