• vilasalnews@gmail.com

கோவில்பட்டியில் வேலைவாய்ப்பு முகாம் - அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்

  • Share on
கோவில்பட்டியில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன கடிதங்களை  அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.செந்தில்ராஜ், தலைமையில் இன்று (29.01.2021) நடைபெற்றது. 

இம்முகாமில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் கொ.வீரராகவராவ், சிறப்புரையாற்றினார். இவ் விழாவில்  செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு தனியார் வேலைவாய்ப்பு முகாமினை தொடங்கி வைத்தார். மேலும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன கடிதங்களை வழங்கினார். முகாமில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் அவர்கள் முன்னிலை அவர்கள் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில்  அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது: 

இம்முகாமில் பல ஆயிரக்கணக் கான இளைஞர்கள், இளைஞிகள் பங்கேற்றுள்ளனர். நீங்கள் பல்வேறு நிறுவனங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக பணியாற்றிட வேண்டும்.

மேலும் தொழில் நிறுவனங்களை தொடங்கிடவும் அரசு பல்வேறு கடன் உதவிகளை வழங்குகிறது. தொழில் குறித்த  திறன் பயிற்சியும் வழங்குகிறது. எனவே வேலை வாய்ப்பு பெறுவதுடன் பல்வேறு தொழில்களையும் தொடங்கி மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பையும் வழங்க வேண்டும் என பேசினார்.

நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் பேசியதாவது:

வேலைவாய்ப்பு துறையின் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் குறித்த திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.  மேலும் பல்வேறு நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்கள் குறித்த விபரங்களை தெரிந்து அதுகுறித்தும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 63.81 லட்சம் நபர்கள் பதிவு செய்து வைத்துள்ளனர். கரோனா காலத்தில் தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான  பணியாளர்களை தேர்வு செய்யும் வகையில் இணையதள சேவை தொடங்கப் பட்டு அதில் இதுவரை 3142 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. 

மேலும் 98347 வேலைநாடுநர்களும் பதிவு செய்துள்ளனர். இதுவரை 17807 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு 14110 நபர்கள் வேலை யில் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு அரசு ஐடிஐ படித்த 10480 நபர்கள் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். இன்று கோவில்பட்டியில் நடைபெறும் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 112 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளது. அதிகமான இளைஞர்கள், இளைஞிகள் வருகை தந்துள்ளனர்.

நிறுவனங்கள் 4300க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமிற்கான சிறப்பான ஏற்பாடுகளை செய்த அனைவருக்கும்  நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி தாளாளர் அருணாச்சலம், வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குநர் சந்திரன், கோவில்பட்டி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூர் சுப்புராஜ், மாவட்ட கவுன்சிலர்; சந்திரசேகர், மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் அன்புராஜ், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் உதவி இயக்குநர் .பேச்சியம்மாள், மாவட்ட வேiவாய்ப்பு அலுவலர் .ரம்யா, கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் சண்முகவேல், கல்லூரி முதல்வர் காளிதாசமுருகவேல், முக்கிய பிரமுகர்கள் அய்யாத்துரை பாண்டியன், விஜயபாண்டியன், குருராஜ்,  செல்வராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
  • Share on

தூத்துக்குடியில் பாஜக நிர்வாகி கார் உடைப்பு

எஸ்பி தலைமையில் தீண்டாமையை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு

  • Share on